ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தாலிபன் அமைப்பினரை குறி வைத்து பாகிஸ்தான் கடந்த 10ஆம் தேதி விமானப் படைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகாய் என்ற இடத்தில் ஆப்கான் படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் பொதுமக்கள் உள்பட இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பலரும் பலியாகினர். மேலும், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த தாக்குதல் தொடர்பாக கத்தார் மற்றும் சவுதி அரேபியா அரசுகள் தலையிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அதன்படி, இரு நாடுகளுக்கு இடையே 48 நேர போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
ஆனால், போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மீறி ஆப்கானிஸ்தானின் 3 இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்டிகா மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 3 ஆப்கானிய கிரிக்கெட் வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆப்கானிய கிரிக்கெட் வீரர்களான கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகிய 3 பேரும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருப்பது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தான் அரசு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகியவை பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லைப் பகுதிகளில் நிலவும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் அறிவித்துள்ளது. கத்தார், மீண்டும் மீண்டும் இரு நாடுகளையும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த நிலையில், எல்லை வன்முறையை நிறுத்துவதற்கும், நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் முடிவில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளன. இந்த முடிவு, எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.