CBI summons TVK leader Vijay for Karur stampede incident
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை சேகரித்த சிபிஐ அதிகாரிகள், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர், காவல் துறையினர் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
அதனை தொடர்ந்து, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல்குமார், தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் ஆட்சியர், கரூர் எஸ்.பி ஆகியோர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 29 மற்றும் 30 என இரண்டு நாட்கள் தொடர்ந்து ஆஜராகி விளக்கமளித்தனர். தவெக மூத்த நிர்வாகிகளிடமும், கரூர் ஆட்சியர், கரூர் எஸ்பி இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து இரண்டு நாட்கள் பல மணி நேரம் விசாரணை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வருகிற ஜனவரி 12ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
Follow Us