கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை உள்ளிட்ட 5 வழக்குகளில் விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (10.10.2024) பிற்பகல் 12.30 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அரசு சார்பில் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன், ரவீந்தரன் என 4 வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர். அதே சமயம் விஜய் சார்பாகத் தாமா சேஷாத்ரி, கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரும் வழக்கு உணவு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பு வாதிடுகையில், “கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனுடைய தந்தையின் வலி எங்களுக்கு (தமிழக அரசு) புரிகிறது. அதாவது தன்னுடைய மகனை இழந்து இங்கு நிற்கக்கூடிய அந்த தந்தையினுடைய வலி மட்டுமல்ல, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடைய அனைவரின் வலியையும் நாங்கள் அறிந்துள்ளோம். அதே சமயம், தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற ஒரு காரணத்தினை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மட்டும் இந்த வழக்கை சி.பி.ஐ .விசாரணைக்கு மாற்ற அனுமதிக்கக் கூடாது.
ஏனெனில் கரூர் துயரச் சம்பவத்தின் கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழ்நாட்டு அதிகாரிகள் தான். எனவே ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை தொடர வேண்டும். அதே சமயம் இந்த விவகாரத்தை பொறுத்தவரைக்கும், தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியை நியமிக்கவில்லை. மாறாகச் சென்னை உயர் நீதிமன்றம்தான் நியமித்தது. ஐ.ஜி. அஸ்ரா கர்க் என்ற காவல்துறை மூத்த அதிகாரிதான் சிறப்பு விசாரணைக் குழுவினுடைய தலைமை விசாரணை அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். இதன் மூலம் உயர்நீதிமன்றம் திறமையான அதிகாரி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.
இவர் சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றியவர். சிறந்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார். எனவே இவருடைய விசாரணையே தொடரலாம். விதிவிலக்காகத் தவிர்க்க முடியாத (Exceptional) வழக்குகளில் தான் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவுகள் உள்ளன. எனவே சி.பி.ஐ விசாரணை தேவை இல்லை. ” எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு பல வழக்குகளைத் தொடர்ச்சியாக சிபிஐ விசாரணைக்கு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் குவிந்து கிடக்கும். ஆனால் சி.பி.ஐ.க்கு இருப்பதோ வரையறுக்கப்பட்ட மனித சக்திகள் (Limited Resource) தான் உள்ளன” என வாதிடப்பட்டது.