CBI send summons TVk N. Anand, Nirmal Kumar
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தில் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையிடம் அதிகாரிகள் விளக்கங்களை கேட்டுள்ளனர். மேலும், கூட்டம் ஏற்பாடு செய்த நபர்களிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us