இந்தியாவில் உள்ள பிரபல தொழிலதிபர்களில் ஒருவர் அனில் அம்பானி. இவரது நிறுவனங்கள் வங்கிகளில் 17 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு அவரை ‘மோசடி நபர்’ எனப் பாரத ஸ்டேட் வங்கி (SBI) அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் மும்பை மற்றும் டெல்லியில் இவருக்குச் சொந்தமான வீடு மற்றும் பல்வேறு நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி (24.07.2025) சோதனை நடத்தியிருந்தனர்.
அதாவது ராகா நிறுவனங்களில் (RAAGA companies - Reliance Anil Ambani Group Companies) எழுந்த சட்டவிரோத பண மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பாக அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இதனையடுத்து அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் ஆகஸ்ட் 5ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அமலாக்கத்துறையின் சம்மனை ஏற்று 17 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனில் அம்பானி கடந்த 5ஆம் தேதி (05.08.2025) நேரில் ஆஜராகியிருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் மும்பையில் உள்ள அனில் அம்பானி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது வங்கி கடன் மோசடி வழக்கு தொடர்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கையில், “மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் லிமிடெட் (RCOM), அதன் இயக்குநர் அனில் டி. அம்பானி, தெரியாத பொது ஊழியர்கள் மற்றும் தெரியாத மற்றவர்கள் மீது வங்கியை ஏமாற்றி, அதன் மூலம் வங்கிக்கு ரூ.2929.05 கோடி தவறான இழப்பை ஏற்படுத்தியதாக மத்திய புலனாய்வுப் பிரிவு ஆகஸ்ட் 21 அன்று குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளது.
மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்திடமிருந்து 22.08.2025 அன்று சி.பி.ஐ. தேடல் வாரண்டுகளைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று (23.08.2025) மும்பையில் இரண்டு இடங்களில் அதாவது மெசர்ஸ் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் லிமிடெட்டின் அதிகாரப்பூர்வ வளாகத்திலும், அனில் டி அம்பானியின் குடியிருப்பு வளாகத்திலும் சோதனை நடத்தி வருகிறது. சோதனைகள் இன்னும் தொடர்கின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.