கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி (13.10.2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Advertisment

மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் தான் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சென்னையை அடுத்துள்ள பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கடந்த 3ஆம் தேதி  (03.11.2025) சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.

Advertisment

அவர் த.வெ.க பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பேருந்தில் என்னென்ன வசதிகள் உள்ளன?. அதில் எத்தனை கேமராக்கள் உள்ளன?.  மேலும் கட்சி தொடர்பாக ஒரு சில ஆவணங்களைக் கேட்டதாகக் கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தான் த.வெ.க.வின் திருச்சி மண்டல இணை செயலாளரும், வழக்கறிஞருமான அரசு என்பவரும், பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் குரு சரண் என்பவரும் நேற்று (08.11.2025) பிற்பகல் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் சுமார் ஒரு மணிநேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர்.

அப்போது அவர்கள் ஏராளமான ஆவணங்களை, சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தாக்கல் செய்தனர். அதாவது விஜய் பரப்புரை மேற்கொண்ட போது பிரச்சார வாகனத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் பதிவுகளையும் அவர்கள் தாக்கல் செய்தாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று (09.11.2025)  மீண்டும், அரசு, குரு சரண் மற்றும் மற்றொரு நபர் என 3 பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

Advertisment