கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி (13.10.2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான கரூர் சுற்றலா மாளிகையில் தற்காலிகமாகச் சிபி.ஐ.யின் விசாரணை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் கரூரில் தங்கி இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறு பல்வேறு கோணங்களில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதனையொட்டி விஜய்க்கு உரியப் பாதுகாப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என டெல்லி காவல்துறைக்குக் கட்சி சார்பில் ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம் முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டனர். அதோடு துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர்.
இதற்கு முன்பு சிபிஐ அலுவலகத்திற்கு இவ்வளவு பாதுகாப்புகள் வழங்கப்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் என அனைத்து தரப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மேலும் சிபிஐ அலுவலகம் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள அரசு கட்டிடங்களுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இத்தகைய சூழலில் தான் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (12.01.2025) காலை டெல்லிக்குச் சென்று சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணியளவில் தொடங்கிய விசாரணை மாலை 04.15 மணியளவில் நிறைவடைந்தது. அப்போது விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள், “பிரச்சார கூட்டத்திற்குத் தாமதமாக வந்தது ஏன்?.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/12/tvk-vijay-sad-2026-01-12-17-25-24.jpg)
கட்சி தொண்டர்களின் பாதுகாப்பு, அவசரக் கால மேலாண்மைக்கான ஏற்பாடுகள், குடிநீர் வசதிகள் செய்யப்படவில்லையா?. அங்கிருந்தவர்கள் மயக்கமடைந்து விழுந்தபோது நீங்கள் ஏன் பேச்சை நிறுத்தவில்லை?” எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையின் போது கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகப் பதிலைப் பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே விசாரணைக்கு நடுவே சிறிது நேரம் விஜய்க்கு மதிய உணவு அருந்தக் கால அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கரூர் துயரச் சம்பவம் நிகழ்ந்த போது சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் இன்று காலை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us