கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி (13.10.2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் தான் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் கரூரில் உள்ள சி.பி.ஐ.யின் தற்காலிக அலுவலகமாகச் செயல்பட்டு வரும் சுற்றலா மாளிகையில் நேற்று (02.11.2025) 7 பேர் விசாரணைக்கு ஆஜராகினர். அதன்படி வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர், மளிகைக் கடை உரிமையாளர்கள், டெய்லர்கள், மெக்கானிக் என 7 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 306 பேருக்கு சம்மன் அனுப்பபட்ட நிலையில் இதுவரை15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் இன்று (03.11.2025) மதியம் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். அதாவது பனையூரில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரி ஒருவர் வந்திருந்தார். அவர் த.வெ.க பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பேருந்தில் என்னென்ன வசதிகள் உள்ளன. அதில் என்னென்ன கேமராக்கள் உள்ளன, கட்சி தொடர்பாக ஒரு சில ஆவணங்களைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அக்கட்சி நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “இங்கே (பிரச்சார பேருந்து) உள்ள சிசிடிவி ஆதாரங்கள், மற்ற என்னென்ன ஆவணங்கள் இருக்கிறதோ அது எல்லாம் கேட்டுள்ளனர். இதற்காக ஒரு பட்டியல் கொடுத்துக் கேட்டுள்ளனர். அது தொடர்பான தகவல் கண்டிப்பாகக் கொடுக்கப்படும். சம்மன் கொடுக்க வந்திருக்கிறார்கள். அதில் ஒரு சில தகவல் கேட்டுள்ளனர். பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம், மற்றபடி சிசிடிவி விவரம் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பழைய எஸ்.ஐ.டி.யிடம் தகவல் கொடுத்திருக்கிறோம். தமிழகக் காவல்துறையில் இருந்து விசாரித்தபோதே அதனைக் கொடுத்திருக்கிறோம். அதே தகவலைத் திரும்பக் கேட்டுள்ளனர்” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/03/tvk-hq-cbi-office-inves-2025-11-03-15-12-29.jpg)