CBI investigation-Vijay leaves for Delhi Photograph: (vijay)
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி (13.10.2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பல்வேறு கோணங்களில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் விசாரணைக்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அவர் உடன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் டெல்லிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்று காலை 11 மணிக்கு விஜய் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையில் விஜய்யிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேளை விசாரணை இன்று முடியாமல் நாளையும் நீடித்தால் நாளை மறுநாள் விஜய் சென்னை திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய்க்கு உரியப் பாதுகாப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என டெல்லி காவல்துறைக்கு கட்சி சார்பில் ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் மனு அளிக்கப்பட்ட நிலையில் விமான நிலையத்தில் இருந்து சிபிஐ அலுவலகம், விஜய் தங்கக்கூடிய இடம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது தனி விமானத்தில் பயணத்தை தொடங்கியுள்ளார் விஜய்.
Follow Us