CBI investigation; Vijay flies to Delhi Photograph: (tvk)
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. இதனை ஏற்று, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த 12ஆம் தேதி காலை டெல்லிக்குச் சென்று சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணியளவில் தொடங்கிய விசாரணை மாலை 04.15 மணியளவில் நிறைவடைந்தது.
இந்த விசாரணையின் போது விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள், “பிரச்சார கூட்டத்திற்குத் தாமதமாக வந்தது ஏன்?. கட்சி தொண்டர்களின் பாதுகாப்பு, அவசரக் கால மேலாண்மைக்கான ஏற்பாடுகள், குடிநீர் வசதிகள் செய்யப்படவில்லையா?. அங்கிருந்தவர்கள் மயக்கமடைந்து விழுந்தபோது நீங்கள் ஏன் பேச்சை நிறுத்தவில்லை?” எனச் சரமாரியாகச் சுமார் 100 கேள்விகள் வரை எழுப்பியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதோடு இந்த சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக சிபிஐ தரப்பில் இருந்து பதிலைப் பெற்றதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து சிபிஐ விசாரணை முடிந்து மாலை 06.30 மணியளவில் அங்கிருந்து விஜய் காரில் புறப்பட்டுச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் ஜனவரி 13ஆம் தேதியும் தொடர்ந்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசாரணையை ஒத்திவைக்குமாறு விஜய் கோரிக்கை வைத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், விசாரணையை தற்காலிகமாக ஒத்திவைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக நாளை (19-01-26) ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று மாலை தனிவிமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
Follow Us