CBI investigation continues for 11th day; Nikita appears Photograph: (cbi)
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை, நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்குவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க சி.பி.ஐக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனிடையே சென்னை மதுரை உயர்நீதிமன்ற கிளையும், இந்த வழக்கை விசாரித்து ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிபிஐ விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. புதிய சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருந்தது. அஜித்குமாரை தாக்கிய போலீசார் கடை ஒன்றில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியதும், செல்போன் சார்ஜரை தூக்கி சென்றதும் தெரியவந்துள்ளது. மடப்புரம் கோவிலுக்கு வெளியே உள்ள பெட்டிக்கடை வைத்திருக்கும் மாரியப்பனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவம் நடந்த நாளன்று நள்ளிரவு நேரத்தில் பெட்டிக்கடைக்கு வந்த தனிப்படை போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்துச் சென்றதாகவும் கூடவே செல்போன் சார்ஜரையும் தூக்கிச் சென்றதாக மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
பதினோராவது நாளாக (24/-7/2025) இன்றும் சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவருடைய தாயார் ஆஜராகும்படி சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று இருவரும் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர். அதேபோல் அஜித்குமார் வீட்டுக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு சம்மன் கொடுத்துள்ள சிபிஐ போலீசார், அஜித்குமார் உடலுக்கு பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவுவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.