கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் 32 வயதான சித்திரவேல். இவர், டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தன்னை சி.பி.ஐ.  அதிகாரி என்று கூறி மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள்  வெளியாகின. மத்திய அரசு வேலைகளை வாங்கித் தருவதாக உறுதியளித்து, பலரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாகவும், ஆன்லைன் மூலம் பல மோசடிகளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

சித்திரவேலின் மோசடி செயல்கள் குறித்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்ததை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை தேடும் பணி தொடங்கியது. இந்நிலையில், சித்திரவேல் கோவையில் தங்கியிருப்பதாக டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்டோபர் 14 ஆம் தேதி கோவைக்கு வந்த டெல்லி சி.பி.ஐ. குழுவினர், ரேஸ்கோர்ஸ் பகுதியில் சித்திரவேல் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று அவரை கைது செய்தனர்.

Advertisment

சித்திரவேலின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏராளமான போலி அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சி.பி.ஐ. அதிகாரியைப் போல தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட போலி அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அடையாள அட்டைகளை பயன்படுத்தி அவர் பலரை ஏமாற்றியதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சித்திரவேலை, மத்திய ஆயுதப்படை காவல்துறையின் உதவியுடன் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர், அக்டோபர் 15 ஆம் தேதி சித்திரவேலை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள், அவரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த கோவை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார், சித்திரவேலை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி வழங்கினார். இதையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் சித்திரவேலை டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisment

சித்திரவேலின் மோசடி செயல்கள், மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை ஏமாற்றியதுடன், ஆன்லைன் மோசடிகள் மூலம் பெரும் தொகையை சுருட்டியிருக்கலாம் என சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். டெல்லியில் நடைபெறவுள்ள விசாரணையில், அவரது மோசடி செயல்களின் முழு அளவு மற்றும் இதில் வேறு யாரேனும் தொடர்புடையவர்கள் உள்ளனரா என்பது குறித்து மேலும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.