தமிழ்நாடு முழுவதும் புதுப் புது வழிகளில் சதுரங்க வேட்டை மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏராளமான புகார் மனுக்கள் தமிழ்நாடு அரசுக்குச் சென்றுள்ளது. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி அலுவலகம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிபிசிஐடி அலுவலகங்களுக்கு உத்தரவு பறந்தது. இந்த உத்தரவையடுத்து கடந்த வாரம் சிபிசிஐடி போலீசார் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தமிழ்நாட்டில் 43 இடங்களிலும் ஆந்திராவில் 4 இடங்கள் என 47 இடங்களில் அதிரடி சோதனைகள் செய்து ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி, இரிடியம் போன்ற 5 மோசடி கும்பலைச் சேர்ந்த 30 பேரை கைது செய்து மத்திய அரசு நிறுவனங்களின் போலி முத்திரையுடன் கூடிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

Advertisment

இதில், ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி தருவதாகக் கூறி 2013ஆம் ஆண்டு ரூ.11 லட்சத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ள குடுமியாண்மலை ரவிச்சந்திரன், தரகர்களாகச் செயல்பட்ட குழந்தை வாசுகி, கருணாமூர்த்தி, சுதா ஆகியோர் மீது ஈரோடு தொல்காப்பியன் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நிர்வாகி குடுமியாண்மலை ரவிச்சந்திரன் மற்றும் கருணாமூர்த்தி ஆகியோரை புதுக்கோட்டை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை குடுமியாண்மலை ரவிச்சந்திரன் எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி மோசடி செய்தார் என்பதை விசாரணை செய்ய நேற்று (19.09.2025 - வெள்ளிக்கிழமை) புதுக்கோட்டை ஜே.எம். 2 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதே போல ரவிச்சந்திரனுக்கு ஜாமீன் கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மனுக்களும் திங்கள்கிழமை (22.09.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்கின்றனர். மேலும் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களே ரவிச்சந்திரனை காப்பாற்றும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள். 

அதே நேரத்தில் பல வழக்கறிஞர்கள் குடுமியாண்மலை ரவிச்சந்திரன் பல ஆயிரம் குடும்பங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். அவரைக் காப்பாற்ற நாங்கள் ஆஜராகமாட்டோம். அப்படி அவருக்காக ஆஜரானால் ரவிச்சந்திரனால் ஏமாற்றப்பட்ட பல ஆயிரம் பேரின் சாபம் நம்மை சும்மா விடாது என்கின்றனர் பல வழக்கறிஞர்கள்.

Advertisment