CBCID in Puzhal Jail - Will Ramajayam case reach its final stage? Photograph: (cbcid)
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை நீண்டு வருகிறது.
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்ந்து பல மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், சிறப்பு புலனாய்வு பிரிவும் தங்களுடைய விசாரணை வட்டத்தில் 13 ரவுடிகளை சந்தேகத்தின் அடிப்படையில் உண்மைதன்மை கண்டறியும் சோதனையை நடத்தினார்கள்.
இப்படியாக தொடர்ச்சியாக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் புழல் சிறையில் உள்ள மண்ணச்சநல்லூர் குணசீலன் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ராமஜெயம் கொலை வழக்கு நீண்ட நாட்களாக விடை கிடைக்காத நிலையில் கொலை வழக்கில் தண்டனை பெற்று பாளையங்கோட்டையில் சிறைவாசியாக உள்ள சுடலையிடம் விசாரணை முடித்த கையோடு சென்னை புழல் சிறைக்கு டிஐஜி வருண்குமார் தலைமையிலான போலீசார் வந்தனர். புழல் சிறையில் உள்ள மண்ணச்சநல்லூர் குணாவிடம் இன்று (13/08/2025) மாலை நான்கு மணியளவில் விசாரணையை தொடங்கி, சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்திவிட்டு வருண்குமார் வெளியேவந்தார்.
2006 ஆம் ஆண்டு முட்டை ரவி என்கவுண்டர் செய்யப்பட்ட போதே, ராமஜெயத்தை கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார் மண்ணச்சநல்லூர் குணா. இதற்கு பின்னணியில், சாதியே காரணமாகச் சொல்லப்படுகிறது. ராமஜெயத்தின் சமூகம் பெரிய அளவில் வளர்ந்துவிடக் கூடாது எனும் ரீதியில் திட்டமிட்டு இந்தப் படுகொலைக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கண்டறிந்த உளவுத்துறை, அப்போதிருந்த முதல்வர் கலைஞருக்கு தகவலை 'பாஸ்' செய்துள்ளனர். இதையடுத்து, முதல்வர் கலைஞர்.. "யோவ், நான்தான்யா உன்னை காப்பாதிருக்கேன்" என கூறிய சம்பவமும் நடந்தது.
அதன்பிறகுதான், பழைய திட்டமிடல்படியே இந்த கொலை திட்டம், ராமஜெயத்தின் நடைபயிற்சி சமயத்தின் போது அரங்கேறியுள்ளது. இப்படிப் பல கோணங்களை அடிப்படையாகக் கொண்டே டிஐஜி வருண்குமார் விசாரித்துள்ளார். நீண்ட நாளாக இழுத்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கை முடிப்பதற்கான இறுதிக்கட்டத்தை வருண்குமார் நெருங்கியுள்ளார் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.