catholic School bans Muslim student from wearing hijab and Kerala minister takes action
இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணியக் கூடாது என தனியார் பள்ளி தடை விதித்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கொச்சி அருகே பள்ளுருத்தி பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் நடத்தி வரும் கத்தோலிக்க பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இஸ்லாமிய மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் படித்து வரும் இப்பள்ளியில், ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளியின் விதிகளை மீறி இப்பள்ளியில் படித்து வரும் 8ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகம், சீருடை அணிந்து வந்தால் மட்டுமே பள்ளியில் அனுமதிக்க முடியும் என்று அந்த மாணவியை கண்டித்து, பள்ளியில் நுழைய தடை விதித்தது . இதனையடுத்து, பள்ளியில் நடந்த விவகாரம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட பெற்றோர்கள், பள்ளிக்குச் சென்று முறையிட்டுள்ளனர். அப்போது பள்ளி நிர்வாகத்துக்கும், மாணவியின் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ கட்சியினர் பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டு, பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவின்படி, பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அனுமதி வழங்கியது. அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன் அந்த பள்ளி இன்று திறக்கப்பட இருந்தது. இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்வதை பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என கேரள பொதுக் கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டார்.
இது குறித்து கூறிய அவர், “ஹிஜாப் அணிந்து கொண்டு மாணவி தனது கல்வியைத் தொடர உடனடியாக பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இந்த சம்பவத்தால் சிறுமிக்கும் அவரது பெற்றோருக்கும் ஏற்பட்ட மன உளைச்சலை பள்ளி முதல்வரும், நிர்வாகமும் நிவர்த்தி செய்ய வேண்டும். கேரளா மதச்சார்பற்ற மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்துகிறது. மத அடிப்படையில் மாணவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் எந்தவொரு செயலையும் பொறுத்துக்கொள்ளாது. கேரளாவில் எந்த மாணவரும் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளக்கூடாது. எந்தவொரு கல்வி நிறுவனமும் அரசியலமைப்பு உரிமைகளை மீற அனுமதிக்கப்படாது” எனத் தெரிவித்தார்.