தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 291 கோடி ரூபாய் கல்வி நிதியை வழங்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இத்தகைய சூழலில் தான் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற மாநிலங்களவையின் திமுக உறுப்பினருமான வில்சன், “கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசுக் கல்வி நிதியை வழங்காததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி பிஆர் கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை மறுநாள் (01.08.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. முன்னதாக தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியிடம், முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்டிருந்த கோரிக்கை மனுவில், 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கான நிலுவையிலுள்ள ரூ.2 ஆயிரத்து 151.59 கோடியையும் 2025-26-ஆம் ஆண்டுக்கான முதல் தவணை நிதியையும் விரைவாக வழங்கிட வேண்டும்.
பி.எம். ஸ்ரீ (PM SHRI) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனையாக்காமல் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு புறம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நேற்று முன்தினம் (28.07.2025) புதுடெல்லியில் நேரில் சந்தித்து தமிழ்நாட்டிற்கு 2024-2025ஆம் ஆண்டுக்கான நிலுவையிலுள்ள சமக்ரா சிக்ஷா நிதியையும், 2025-2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை நிதியையும் உடனடியாக வழங்கிட வலியுறுத்தியிருந்ததும் கவனிக்கத்தக்கது.