Advertisment

த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

tvk-bussy-anand

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி (13.09.2025 - சனிக்கிழமை) அன்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்பதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் நேற்று முன்தினம் (06.09.2025 - சனிக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்குச் சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்ற அவர் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்குக் காவல் துறையில் அனுமதி கேட்கும் கடிதத்தைக் கோவிலில் வைத்துச் சிறப்புப் பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். 

Advertisment

அப்போது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அங்குத் திரண்டனர். அதாவது த.வெ.க. நிர்வாகிகள் பலர் திருச்சி - புதுக்கோட்டைச் சாலையில் கார்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால் அங்கிருந்த போலீசார் அந்த வாகனங்களை எடுக்க அறிவுறுத்தியும் அக்கட்சியினர் எடுக்காமலும், போலீசாரைப் பணி செய்ய விடாமலும் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்ட விரோதமாக ஒன்று கூடிப் பிரச்சனை செய்ததன் காரணமாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், திருச்சி கிழக்கு மாநகர் மாவட்ட தலைவர் குடமுழுக்கு கரிகாலன், அக்கட்சியின் நிர்வாகிகளான வெள்ளைச்சாமி, துளசி மணி, செந்தமிழ், மோசஸ் உள்ளிட்டோர் மீது சட்ட விரோதமாகக் கூடுதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுப்பது, அரசு ஊழியர்களின் உத்தரவைப் பின்பற்றாமல் நடப்பது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் விமான நிலைய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

வரும் 13ஆம் தேதி திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதே சமயம் திருச்சியில் உள்ள டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து விஜய் பிரச்சாரத்தைத் தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகச் சத்திரம் பேருந்து நிலையத்தை அக்கட்சியினர் அனுமதி கேட்டுக் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அந்த இடத்தில் அரசியல் கட்சிகளுக்குக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுப்பதில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏனென்றால் அப்பகுதி பேருந்து நிலையமாக இருப்பதால் அரசியல் கட்சிகளுக்குக் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தால், நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும். அதனால் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மரக்கடை பகுதியைத் தேர்வு செய்யுமாறு அக்கட்சியினருக்கு போலீசார் அறிவுரை வழங்கியிருந்தனர். இந்நிலையில் அக்கட்சியினர் நீதிமன்றத்தை நாடி சத்திரம் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்கான அனுமதியைக் கோர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Bussy Anand case filled police Tamilaga Vettri Kazhagam trichy tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe