கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், தவெக நிர்வாகியான அக்கட்சியின் த.வெ.க. பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக கரூர் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு மத்தியில் நேற்று முன்தினம் இரவு சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை வெளியிட்ட ஆதவ் ஆர்ஜுனா, சில நிமிடங்களிலேயே அந்த பதிவை நீக்கினார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இலங்கை, நேபாளம் போல அரசுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும் என்று இளைஞர்களை தூண்டும் வகையில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அந்த பதிவை ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கினார்.

Advertisment

இருப்பினும், அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் ஆதவ் அர்ஜுனாவை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், திமுக எம்.பிக்களான கனிமொழி, ஆ.ரசா ஆகியோர் சர்ச்சைக்குரிய பதிவுக்காக ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்டதாகக் கூறி ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் பலரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisment