கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில மாநாடு நடைபெற்றது. இதற்குச் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக விருத்தாசலத்திற்குச் சென்ற சீமான் மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார். அதன் பின்னர் அவர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரில் ஏறச் சென்றார். 

Advertisment

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ரங்கநாதன், சீமானுடைய காரை வழிமறித்துத் தகாத வார்த்தைகள் கூறி திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் அது குறித்து ரங்கநாதனிடம் கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ரங்கநாதனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதே சமயம் அவதூறாகப் பேசிய திமுக நிர்வாகி ரங்கநாதனைக் கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

மேலும், காரை வழிமறித்து அவதூறாகப் பேசிய திமுக நிர்வாகி ரங்கநாதனைக் கைது செய்ய வேண்டுமென விருத்தாசலம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் திமுக பிரமுகர் ரங்கநாதனுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக, திமுக பிரமுகர் அளித்த புகாரில் சீமான் மீது அவதூறாகப் பேசி தாக்குதல்,  கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போன்று நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரில் திமுக பிரமுகர் ரங்கநாதன் மீதும் இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.