Advertisment

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு!

gcc-sanitation-worker-pro-arrest-marina-1

பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

Advertisment

இந்த வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்து அதன் பின்னர் விடுவித்தனர். இத்தகைய சூழலில் தான் சென்னை திரு.வி.க. நகர், ராயபுரம் மண்டலங்களைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் நேற்று (05.11.2025) மெரினா கடற்கரையில் உள்ள கடலில் இறங்கி தூய்மை பணிகளை தனியார்மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisment

இதனையடுத்து உரிய அனுமதியின்றி கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதாகக் கூறி  தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். முன்னதாக மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் காலை 7 மணியளவில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் குழுமினர். அதன் பிறகு முதற்கட்டமாக 50 பேரை போலீசார் கைது  செய்தனர். இதனையடுத்து மற்றவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். 

அதே சமயம் காலை 10 மணி அளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காமராஜர் சாலை வழியாக அவரது வீட்டிலிருந்து தலைமைச்செயலகம் செல்லக்கூடிய நிலையில் அவரது வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டதாகவும் தகவல் வெளியான நிலையில் காவல்துறையினர் அங்கு ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் பணி நிரந்தரம் செய்ய கோரி மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் 83 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 51 பெண் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 83 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

chennai corporation case police struggle marina beach sanitary workers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe