சேலம் வாழப்பாடி அருகே பா.ம.க எம்.எல்.ஏ அருள் சென்ற காரை நடுவழியில் மறித்து சிலர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று துக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பா.ம.க எம்.எல்.ஏ அருள் தனது ஆதரவாளர்களுடன் சேலம் மாவட்ட, பெத்தநாயக்கம் பாளையத்திற்கு சென்றிருந்தார். அந்த நிகழ்வை முடித்து விட்டு வாழப்பாடி அருகே வந்து கொண்டிருந்த போது அங்குவந்த அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட கும்பல், அருளின் காரை மறித்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 கார்கள் சேதமடைந்து.. கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பரபரப்பான இந்த சூழலில், பலரும் அங்கு சரமாரியாக தாக்கப்பட்டனர். அந்த நேரத்தில், அங்கிருந்த போலீசார் உதவியுடன் எம்எல்ஏ அருள் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக சேலம் காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் புகார் அளித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எம்எல்ஏ அருள், “அன்புமணி ஆதரவாளர்கள் எங்களை கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்தினர். அன்புமணியின் டீசன்ட் அண்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ் இதுதானா?. அறிவுச் செல்வனின் கொலைக்கான காரணத்தை விரைவில் வெளியிடுவேன். இதே மாதிரி என்னை சீண்டிக் கொண்டே இருந்தால் நான் பல உண்மைகளை சொல்வேன். அன்புமணியைப் பற்றி பல உண்மைகள் எனக்கு தெரியும். நான் கூடவே தான் இருந்தேன். என்னை சீண்ட வேண்டாம். இந்த மாதிரி மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன்.” என்று கோபமாக கேள்வி பேசினார்.
இதனிடையே, அருள் எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆதரவாளர்கள் மீது அன்புமணி தரப்பினர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அன்புமணி தரப்பைச் சேர்ந்த ராஜேஷ் என்ற மாற்றுத்திறனாளியின் இடத்தில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தததால் பா.ம.க எம்.எல்.ஏ அருளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதனால் அருளின் ஆதரவாளர்கள் அவரை தாக்குதல்ன் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, துக்க நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிய போது அன்புமணி ஆதரவாளர்களால் எம்.எல்.ஏ அருள் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், அருள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அன்புமணி ஆதரவாளர்கள் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்துள்ளனர். ஆனால், அன்புமணி கொடுத்த புகாரின் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ சதாசிவம் தலைமையில் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தாங்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், எம்.எல்.ஏ அருளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அன்புமணி தரப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏ அருள் உட்பட 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/05/arull-2025-11-05-19-34-58.jpg)