ஈரோடு வெண்டிபாளையத்தில் கீழ்பவானி வடிநில கோட்ட நீர்வளத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு தலைமையகமாக உள்ளது. இந்த அலுவலகத்தில் தீபாவளி நன்கொடை பெறப்பட்டு வருவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் அங்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, நீர்வளத்துறை அலுவலகத்தில் கரூர் உட்கோட்ட உதவி செயற்பொறியாளராக குமரேசன் (51) என்பவரும், கல் குவாரி உரிமையாளரான பவானியை சேர்ந்த கந்தசாமி (61) என்பவரும் இருந்தனர். இதையடுத்து இருவரிடம் சோதனை நடத்தியபோது, கல்குவாரி உரிமையாளர் கந்தசாமியிடம் இருந்த பேக்கில் ரூ.3.50 லட்சம் ரொக்கம் இருந்தது. தொடர்ந்து, நடத்திய விசாரணையில், உதவி செயற்பொறியாளர் குமரேசனுக்கு தீபாவளி நன்கொடை வழங்க கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து தீபாவளி நன்கொடை என்ற பெயரில் லஞ்சம் பெற முயன்ற உதவி செயற்பொறியாளர் குமரேசன் மீதும், நன்கொடை கொடுக்க முயன்ற கல்குவாரி உரிமையாளர் கந்தசாமி மீதும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், கந்தசாமியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.