கடலூர் மாவட்டம் சிதம்பத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சனாதன எதிர்ப்பு என்பது இந்துத்துவா எதிர்பா என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் வாக்குத்திருட்டை எதிர்த்து கையெழுத்து இயக்கம் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரியின் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் என்.வி. செந்தில்நாதன் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தில்லை ஆர். மக்கீன் வரவேற்றார்.
மாநில செயலாளர் பிபிகே. சித்தார்த்தன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார், நகர செயல் தலைவர் தில்லை கோ. குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்று சிறப்புரையாற்றி பேசுகையில், “தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து என்னிடம் துண்டு சீட்டையும் வழங்கினார்கள். காமராஜர் ஆட்சி எப்போது அமையும் என்றால் நாம் தமிழகத்தில் முதலமைச்சராக வரவேண்டும். அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் தோழமைக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க முடியும்.
பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்து அமைச்சரவையிலும் பங்கேற்றது. அப்போது அவர்கள் வாஜ்பாய் நல்லவர் என கூறினார்கள். அப்போதே காங்கிரஸ் இது சரியான நடவடிக்கை இல்லை என சுட்டிக்காட்டியது. ஒருவரை பிடிக்கும் போது அவர் கெட்டவராக இருந்தாலும் நல்லவராக தெரிவார்கள். பிடிக்காத போது நல்லவராக இருந்தாலும் பிடிக்காதவர்கள் போல் தான் தெரிவார்கள். எனவே தற்போதுள்ள திமுக தலைவர் சனாதனத்திற்கு எதிராக செயல்படுகிறார். அதே நேரத்தில் இவர் பாஜகவுடன் இணக்கத்தில் இருந்தால் பல்வேறு சலுகைகளை இவர் பெற்றிருக்கலாம். தற்போது நிதி நெருக்கடியில் உள்ள சூழ்நிலையிலும் பாஜக ஆர்.எஸ்.எஸ். சனாதன கொள்கைகளை எதிர்த்து போராடி வருகிறார்.
தற்போதுள்ள திமுக கூட்டணி நமக்கு உகந்த கூட்டணி அதே நேரத்தில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது. இது முதல்வருக்கு தெரிந்து நடந்ததா?. மற்ற கட்சி எம்எல்ஏக்களை ஒரு மாதிரியாகவும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை ஒரு மாதிரியாகவும் நடத்தப்படுகிறது என்பது இதிலிருந்து தெரிகிறது” என்று பேசினார். இந்த கருத்தரங்கில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும் சட்டமன்ற உறுப்பினர்களுமான ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் மாநிலத் துணைத் தலைவர் ஜி ராஜேந்திரன் மாவட்ட தலைவர்கள் சங்கர் செங்கம் குமார் மணிகண்டன் லோகநாதன் சுரேஷ் ஜெய் கணேஷ் விவசாயி அணிதலைவர் இளங்கீரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கே.எஸ் அழகிரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார்கள்.