'Case free; loan waiver' - AIADMK announces next phase of promises Photograph: (admk)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கி நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். முன்னதாக பெண்களுக்கு 'குலவிளக்கு' திட்டத்தில் பண உதவி மற்றும் ஆண்களுக்கு இலவச பேருந்து என்ற 5 தேர்தல் வாக்குறுதி அறிவிப்புகளை ஏற்கனவே அதிமுக வெளியிட்டிருந்தது. இந்தநிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை தற்பொழுது எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதியோர் ஓய்வூதியம் 2000 ரூபாய் உயர்த்தப்படும்; ஜல்லிக்கட்டில் வீரர்கள் காளை பிடிக்கும் பொழுது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு குடும்பத்தாருக்கு ஒரு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்; ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு லட்சம் வழங்கப்படும்; ஜல்லிக்கட்டு போட்டிக்கு தற்பொழுது இருக்கும் ஆன்லைன் முறை ரத்து செய்யப்பட்டு ஏற்கனவே இருந்த பழைய நடைமுறை மீண்டும் பின்பற்றப்படும்; மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில் அரசே ஏற்கும்; மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்; இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்; ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்' என்றார்.
அதன் பிறகு செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''தமிழகத்தின் தலை எங்கே நிமிர்ந்து இருக்கிறது ஏற்கனவே தொங்கிவிட்டது. பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. அண்மையில் வட மாநில தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை; ஒரு பெண்; ஒரு ஆண் என மூன்று பேர் இறந்திருக்கிறார்கள். அதோடு நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் ஒரு கேண்டினில் வேலை செய்கின்ற பெண்மணியை அங்கு இருக்கின்ற கேண்டீன் முதலாளி மற்றும் அவருடைய நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது தமிழகம் எவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்பதை காட்டுகிறது. இதைத்தான் நான் சொல்கிறேன். தமிழகம் தலைநிமிர்ந்து அல்ல தலை குனிந்து போய், தொங்கி போய் இருக்கிறது'' என்றார்.
விஜய் குறித்த கேள்விக்கு, ''கரூர் சம்பவம் நடந்த பிறகு 72 நாட்களுக்கு விஜய் வெளியே வரவில்லை. எந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி இருக்கிறது என்று கூட விஜய்க்கு தெரியாது. எந்த கட்சி தேர்தலில் தலைமை தாங்கும் என்று கூட விஜய்க்கு தெரியவில்லை. அவரை வைத்து என்ன செய்வது. அவருக்கு ஒன்றும் புரியாத போது எங்களிடம் இதைப் பற்றி கேள்வி கேட்காதீர்கள்'' என்றார்.
Follow Us