திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகிலுள்ள மின்னூர் பகுதியில், தனியார் நிலத்தில் கிராவல் மண் கொட்டுவதற்காக, சோலூர் பகுதியைச் சேர்ந்த கணபதிக்கு சொந்தமான குவாரியிலிருந்து, லாரி உரிமையாளர் அஸ்வினுக்கு சொந்தமான இரு லாரிகளில் அரசு அனுமதியுடன் கிராவல் மண் கொண்டு செல்லப்பட்டது. இதன்போது, ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த திமுக மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சௌந்தரராஜன் மற்றும் கிரிசமுத்திரத்தைச் சேர்ந்த ஜெயபால் உள்ளிட்டோர் லாரிகளைத் தடுத்து நிறுத்தினர்.
இதை அறிந்த அரசு அனுமதி பெற்ற குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கணபதி மற்றும் மகேஷ் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு வந்து, “தனியார் நிலத்தில் அரசு அனுமதியுடன் கிராவல் மண் கொண்டு வரப்படுகிறது, ஏன் தடுக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு, “நீங்கள் அனுமதியின்றி மண் கொண்டு வருகிறீர்கள்” என சௌந்தரராஜன் தரப்பு பதிலளித்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றிய நிலையில், சௌந்தரராஜன், ஜெயபால் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், குவாரி உரிமையாளர்களான மகேஷையும் கணபதியையும் கடுமையாகத் தாக்கினர். மேலும், அவர்களது செல்போனைப் பறித்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இதில் படுகாயமடைந்த மகேஷ் மற்றும் கணபதி, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் ரேவதி மற்றும் ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் வெங்கடேசன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதியில்லாத வாகனங்களைப் பறிமுதல் செய்வதாகக் கூறி, இரு தரப்பினரையும் கலைத்து அனுப்பினர்.
மேலும், அனுமதியின்றி கிராவல் மண் கொண்டு வந்து அராஜகத்தில் ஈடுபட்டு, குவாரி உரிமையாளர்களைத் தாக்கியதாக, பாதிக்கப்பட்ட மகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், திமுக மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சௌந்தரராஜன் மற்றும் ஜெயபால் ஆகியோர் மீது ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.