Case filed against 47 people including TVK district secretary Procession without permission
புதுக்கோட்டை நகரில் இன்று (01-11-25) காலை புதுக்கோட்டை மாவட்ட த.வெ.க சார்பில் மாவட்டச் செயலாளர் முகமது பர்வேஸ் தலைமையில் கட்சி கொடி கலரில், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, முகமது பர்வேஸ் படம் மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட குடைகளை திருவப்பூரில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, காளை சிலை, பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கீழராஜவீதி, வடக்கு வீதி ஆகிய பகுதிகளுக்கு முகமது பர்வேஸ் சைக்கிளிலும் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் பைக்கள், 2 கார்களில் ரோடு ஷோ போல ஊர்வலமாக சென்று பூ, பழக்கடைகளுக்கு குடைகள் வழங்கி படங்கள் எடுத்துக் கொண்டு சென்றனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த போலீசார் வாகன ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய போது, போலீசாரிடம் வாக்குவாதம் செய்த த.வெ.கவினரையும் வாகனங்களையும் டி.எஸ்.பி அப்துல் ரஹ்மான் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில், அனுமதி பெறாமல் வாகனப் பேரணி நடத்தியது, சட்ட விரோதமாக கூட்டம் கூடியது, கூட்டம் கூடி பொதுக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியது என சில பிரிவுகளில் பேரணி நடத்திய த.வெ.க மாவட்டச் செயலாளர் முகமது பர்வேஸ் உள்பட 47 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 பேர்கள் மீது வழக்கு பாயும் என்றும் கூறப்படுகிறது. இதனால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow Us