கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அதாவது துணைவேந்தர் நியமனம், யூஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளைக் காரணம் காட்டி மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இதனையடுத்து இந்த மசோதா தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கும், அதோடு தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் இன்று (17.10.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரத்தில் அமைச்சரவையின் ஆலோசனையின்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஏற்கனவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் வழங்கவில்லை. மசோதா மீதான வழக்கமான நடைமுறை அவர் கடைப்பிடிக்கவில்லை. அதோடு அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு எதிரான செயலாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “ஏற்கனவே குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய விவகாரத்தில் முடிவு செய்து பின்னர் இந்த வழக்கை விசாரிக்கலாமே?” எனத் தெரிவித்தார். அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 381 மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒவ்வொரு மசோதாவுக்கும் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றால் இதற்கு ஒரு தனி அமர்வையே அமைக்க வேண்டியது இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், “மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக் கால நிர்ணயம் செய்த உத்தரவிற்கு எதிராகக் குடியரசுத் தலைவர் தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் 21ஆம் தேதிக்கு முன்பு வெளியாகும். எனவே இந்த தீர்ப்பிற்குப் பிறகு மீண்டும் இந்த வழக்கின் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டு அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் வழக்கின் விசாரணை நடைபெற்றுத் தீர்ப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்தனர்.