தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமி கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். அப்போது அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் சொத்துக்கள் குவித்ததாகக் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது. அதனைத் தொடர்ந்து விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்யப்பட்டது. அதன்படி உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்பில் அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மனைவி, மகன் செந்தில்குமார், மற்றும் அவரது மகள் இந்திரா உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணையை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதோடு இந்த வழக்கை ஆறு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இத்தகைய சூழலில் தான் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ. பெரியசாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று (18.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிலளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸானது பிறப்பிக்கப்பட்டது.