முந்தைய அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி பதவி வகித்து வந்தார். அப்போது சென்னை கோவை உள்ளிட்ட மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Advertisment

அதோடு இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று தெரிவித்து புகார் அளித்தவர்கள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று (01.09.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜராகி வாதிடுகையில், “இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாகக் கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த காந்திமதி என்பவருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 2 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதி பெற வேண்டிய உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது. அரசு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் விரைந்து நடவடிக்கை இருக்க வேண்டும். முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில் அதிலும் குறிப்பாக நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் காவல் துறை பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.