அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு; இ.பி.எஸ். மனு தள்ளுபடி!

eps-judgement

சென்னையில் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுக்  கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து இந்த அறிவிப்பை எதிர்த்தும், பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி ஆகியோர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதோடு அதிமுக பொதுசெயலளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது உள்ளிட்ட தீர்மானத்தை எதிர்த்து அதிமுக உறுப்பினர் என்ற முறையில் சூரியமூர்த்தி தனியாக உரிமையியல் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே. இதுபோன்று கட்சி விதிகளைப் பின்பற்றாமல் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது சட்ட விரோதம். எனவே இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம், “தனக்கு எதிராக சூரியமூர்த்தி தொடர்ந்த இந்த வழக்கை  நிராகரிக்க வேண்டும்” என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தனக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்த சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினரே அல்ல. கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சியின் செயல்பாடு குறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்ப முடியாது. எனவே அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த 4வது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் கண்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில், “அதிமுக கட்சி விதிப்படி பொதுச் செயலாளர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த விதிகளின் படிதான் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது தொடர்பாக எந்த விவரங்களும் இந்த மனுவில் தெரிவிக்கப்படவில்லை. எனவே சூரியமூர்த்தி தொடர்ந்த இந்த  வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்” எனத் தெரிவித்தார். அதோடு சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமி தாக்கல்  செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

admk case court dismissed general secretary judgement
இதையும் படியுங்கள்
Subscribe