சாலை வசதி இல்லாத கிராமம்; இறந்தவரின் உடலைத் தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற அவலம்!

103

திருப்பூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 18 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 6,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஈசல் திட்டு பகுதியைச் சேர்ந்த மணியன் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது உடலை சொந்த கிராமமான ஈசல் திட்டு பகுதிக்குக் கொண்டு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், அடர்ந்த வனப்பகுதியிலும், வனவிலங்குகள் நடமாடும் பகுதியிலும், தொட்டில் கட்டி உயிரிழந்தவரின் உடலை தூக்கிச் சென்றனர். இப்பகுதியில் மருத்துவம் மற்றும் கல்வி தேவைகளுக்காக சாலை வசதி அமைத்துத் தரக் கோரி, பல ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதற்கு முன்னாள் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்தவராஜ் சாலை அமைக்க ஒப்புதல் அளித்து, 59 லட்சம் ரூபாய் நிதியையும் ஒதுக்கியிருந்தார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இப்பகுதியில் சாலை அமைக்கப்படாததால், மலை கிராம மக்கள் இன்று வரை தொட்டில் கட்டி உடலை தூக்கிச் செல்லும் அவல நிலை தொடர்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

police tirupur
இதையும் படியுங்கள்
Subscribe