கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக கண்ணூரை நோக்கி அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று பாலத்துக்கு இடையில் சிக்கி விபத்துக்குள்ளானது. கண்ணூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டிருந்தது. மேலும் பாலத்தின் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத காரணத்தால், வாகன ஓட்டிகள் பாலத்தின் மீது செல்லத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தச் சூழலில்தான் கடந்த 16 ஆம் தேதி கோழிக்கோடு பகுதியில் இருந்து அதிவேகமாகச் சென்ற கார், எச்சரிக்கைப் பலகையை மீறி கட்டுமானம் முடியாத பாலத்தின் மீது சென்றுள்ளது. பாலத்தின் உச்சியில் கார் சென்றபோது இரு பாலங்களுக்கு இடையே சிக்கி கார் அந்தரத்தில் தொங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த காரின் ஓட்டுநர் அலறித் துடித்துள்ளார். அந்தச் சத்தம் கேட்டு உள்ளூர் மக்களும் சக வாகன ஓட்டிகளும் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

Advertisment

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு இடுக்கி தீயணைப்பு மீட்புத் துறையினரும் போலீசாரும் விரைந்து வந்தனர். ஏணியைக் கொண்டு காரில் மயக்க நிலையில் இருந்த ஓட்டுநரைப் பத்திரமாக கீழே கொண்டுவந்தனர். சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட கார் ஓட்டுநரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிரேன் உதவியுடன் கயிறு கட்டி இரு பாலங்களுக்கு இடையில் சிக்கிய காரை வெளியே எடுத்தனர்.

எச்சரிக்கைப் பலகையை மீறி சென்றதாலேயே இந்த விபத்து நடந்திருக்கிறது என்றும், மதுபோதையில் ஓட்டுநர் காரை அதிவேகமாக இயக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்துக்கு இடையே கார் சிக்கிக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.