கோப்புப்படம் (அடிக்கல் நாட்டு விழா)
சென்னையில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில், முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ. 6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 2024ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி (13.03.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் 470 ஏக்கரில் டாடா, ஜாக்குவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் (28.09.2024) அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (09.02.2026) திறந்து வைக்க உள்ளார். இந்த ஆலை ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 16 மாதங்களில் உற்பத்தி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பி. ராஜா, ஆர். காந்தி, டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
Follow Us