ஆந்திராவில் இருந்து 5 ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு காரில் ராமேஸ்வரம் செல்லத் திட்டமிட்டிருந்தனர். அதன்படி ஆந்திராவில் இருந்து கிளம்பி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வந்த அவர்கள், ஈ.சி.ஆர். சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பு காரை நிறுத்திவிட்டு, அதிகாலை 3 மணியளவில் காரிலேயே தூங்கிக் கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது கீழக்கரையைச் சேர்ந்த ஒரு கார் ஏர்வாடியில் இருந்து திரும்பி கீழக்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. 7 பேருடன் பயணம் செய்த அந்தக் கார் கீழக்கரை அருகே வந்தபோது, ஹோட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்புறம் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆந்திராவில் இருந்து வந்த 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம், படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கீழக்கரையைச் சேர்ந்த காரின் ஓட்டுநரும் உயிரிழந்தார்.

Advertisment

இதைத் தொடர்ந்து படுகாயமடைந்த கீழக்கரைச் சேர்ந்த 6 பேரும், ஆந்திராவைச் சேர்ந்த ஒரே ஒரு ஐயப்ப பக்தரும் என மொத்தம் 7 பேரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்த கீழக்கரையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முஷ்டாக் அகமது (வயது 30), ஆந்திராவைச் சேர்ந்த ராமச்சந்திர ராவ் (55), அப்பாரோ நாயுடு (40), பண்டார சந்திரராவ் (42), ராமர் (45) ஆகிய ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கீழக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆந்திராவில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் ஐய்யப்ப பகதர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment