Car blast at Delhi's Red Fort?
டெல்லி செங்கோட்டை அருகே இன்று கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லியின் முக்கிய இடமான செங்கோட்டை மெட்ரோ முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்தது. சுற்றுலா பகுதியான செங்கோட்டையில் திடீரென கார் வெடித்ததை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இதனால், தலைநகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கார் வெடித்துச் சிதறியதை அடுத்து 7 தீயணைப்பு வாகனங்கள் உடனடியான விரைந்துள்ளன. தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் செங்கோட்டைக்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு முயற்சி செய்து வருகின்றனர். இதனிடையே, கார் வெடித்து சிதறிய இடத்தில் இருந்த சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 9 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானாவில் வெடிபொருட்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால் வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், வெடித்து சிதறிய காரில் சிஎன்ஜி சிலிண்டர் இருந்ததால் விபரீதம் ஏற்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் வெடித்துச் சிதறியதால் சுற்றியுள்ள இடங்களில் அபாய ஒலி எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் தலைநகர் டெல்லி அமைந்துள்ளது.
Follow Us