சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடலூர் ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவ மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கடலூர் அருகே செம்மங்குப்பம் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட்டை கடலூரில் உள்ள தனியார் பள்ளி வேன் காலை நேரத்தில் கடக்கும்போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதி செழியன், நிமலேஷ், சாருமதி ஆகிய 3  மாணவ மாணவிகள் உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் மாணவ, மாணவிகள் அல்லாமல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை காலை நடைபெற்ற இறைவணக்க கூட்டத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவ மாணவிகளுக்கு அவரது படங்களை வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் பள்ளியின் 10, 11, 12-ஆம் வகுப்பு  மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு அவர்களின் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த மாணவ மாணவிகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

Advertisment

இதில் பள்ளியின் தாளாளர் வீனஸ்குமார் கலந்துகொண்டு பள்ளிக்கு மாணவ மாணவிகள் பல்வேறு வாகனத்தில் வருகிறீர்கள்,  அதில் ஓட்டுநர்கள் வண்டியை ஓட்டிக்கொண்டு செல்போன் பேசினாலோ அல்லது போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் இருந்தாலோ உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் அல்லது உங்களின் பெற்றோரிடம் கூற வேண்டும். இல்லையென்றால் அது பெரும் விபத்தை ஏற்படுத்தும். பள்ளிக்கு வரும்போது ரயில்வே கேட் போடப்பட்டிருந்தால் கேட்டுக்கு கீழே சைக்கிள் தள்ளிக்கொண்டு, கேட்டடில்  குனிந்து  வரக்கூடாது.  ஒரே ஆட்டோவில் அதிக கூட்டமாக பள்ளிக்கு வரக்கூடாது.  உள்ளிட்ட  போக்குவரத்து விதிகளை கூறி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ் போனீகலா உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.