ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு (2025) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள் - I மற்றும் தாள் - II) நடத்துவதற்கு உத்தேசித்து அறிவிக்கையை (Website: http://www.trb.tn.gov.in) அதற்கானஅறிவிக்கையைக் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி (11.08.2025) வெளியிடப்பட்டது. கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அதன் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முதலில் தகுதித் தேர்வுகள் நடத்தி பிறகு போட்டித் தேர்வுகள் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்து வருகிறது. அதே போல தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வுக்குத் தேர்வு வாரியம் அறிவித்துள்ள நிலையில் பணியில் உள்ள ஆசிரியர்களும்தகுதித்தேர்வு தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்களும் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (08.09.2025) மாலையுடன் விண்ணப்ப காலம் முடிவடைகிறது. கடைசி நாளில் ஒவ்வொரு ஊரிலும் ஏராளமானவர்கள் விண்ணப்பம் செய்து வரும் நிலையில் இன்று காலை முதலேசர்வர் பிரச்சனை ஏற்பட்டு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பல ஆயிரம் பேர் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகி மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். ஆகவே ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.