உலகில் மிகவும் கொடுமையான நோய்களில் ஒன்றாக கருதப்படுவது புற்றுநோய். தீர்க்க முடியாத அல்லது எளியோரால் சிகிச்சை எடுக்க முடியாத அளவிற்கு மிகக் கொடூரமானதாக கருதப்படுகிறது. விலை உயர்ந்த மாத்திரைகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் எடுத்துக் கொண்ட பிறகு அதில் இருந்து முற்றிலும் விடுபட முடியும். அதிலும் முதல் நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதிலிருந்து மீள்வது எளிது என்பவையெல்லாம் மருத்துவத் துறையின் கூற்றுகளாக இத்தனை வருடங்கள் இருந்து வருகிறது.

Advertisment

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வசதிகள், புதிய கண்டுபிடிப்புகள் உலகை புதிய பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் நிலையில், மருத்துவத்துறையிலும் சில புதிய புரட்சிகள் அபரிமிதமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேன்சர் சிகிச்சைக்கு பல்லாண்டு காலமாகவே சிகிச்சைக்கான தீர்வு மற்றும் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களை குறைத்து உயிர் வாழ்தலை நீடிக்க வைப்பது போன்றவை மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய சவாலாக நீடித்து வந்தது.

இந்நிலையில் பல்வேறு மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு புற்றுநோய் தடுப்பூசியானது பயன்பாட்டிற்கு வருவதற்கு தயாராக உள்ள நிலையில் அனுமதிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி பற்றி பெடரல் மெடிக்கல் அண்ட் பயாலஜிக்கல் ஏஜென்சி கொடுத்த தகவலின் படி பெருங்குடல் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு தடுப்பூசியை பயன்படுத்தி அதனுடைய முடிவுகள் எடுக்கப்பட்டது. புற்றுநோயினுடைய வகை மற்றும் புற்றுநோயால் ஏற்பட்ட கட்டி வளர்ச்சியை 80 சதவீதம் வரை அவை குறைப்பதாக தெரிய வந்துள்ளது.