சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் தில்லை ஓடைக் குளம் பழமை வாய்ந்ததாக உள்ளது. இந்த ஓடைக் குளம் தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால் வாய்க்காலாகக் காணப்பட்டது.
இதையொட்டி, அண்ணாமலை நகர் பேரூராட்சி நிர்வாகம் 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இந்த தில்லை ஓடைக் குளத்தைத் தூர்வாரி, பொதுமக்கள் தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையிலும், நடைபயிற்சியின்போது இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு இருக்கைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமைத்துள்ளது.
இதனைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் சங்கர், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர், உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். வாய்க்காலாக இருந்த இடம் நவீன குளமாக மாற்றப்பட்டதை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.