கனடாவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு உட்பட்ட டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) என்ற நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெண் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் குடியிருப்பில் மேலும் இருவர் உயிரிழந்து கிடந்தனர்.
மற்றொரு நபர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். அதோடு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரும், தன்னைத்தானே சுட்டுக்கொண்டதால் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 25 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக ராயல் கனடியன் மவுண்டட் போலீஸார் (RCMP) தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கென் ஃபிலாய்ட் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் சிறுவர்கள் என்ற விவரத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கனடா நாட்டில் மிக மோசமான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us