தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணியின் மகன் பிரகதீஸ்வரன் - மது பிரதிக்சா ஆகியோரது திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், “நான் உறுதியாக சொல்கிறேன். பா.ஜ.க. எப்படிப்பட்ட சதிச்செயலைச் செய்தாலும், அவர்களால் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது என்பதை அழுத்தந்திருத்தமாக நான் குறிப்பிட விரும்புகிறேன். அதனால் தான் தங்களுடைய திட்டங்கள் தமிழ்நாட்டில் எதுவும் எடுபடவில்லை என்ற ஆத்திரத்தில் தான் நம் மீது இருக்கின்ற வன்மத்தில், இப்போது என்ன பேசுகிறார்கள். 

Advertisment

அதிலும் குறிப்பாக, பிரதமர் மோடி பீகார் மாநிலத்திற்கு சென்று என்ன பேசியிருக்கிறார்? தான் எல்லோருக்குமான பிரதமராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் மோடி. ஆனால் அங்கே என்ன பேசுகிறார் என்று சொன்னால், தமிழ்நாட்டைக் காட்டி பீகாரில் வெறுப்புப் பேச்சைப் பேசியிருக்கிறார். ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டை’ எல்லோரிடமும். சகோதரத்துவத்துடன் பழகும் நம்மைப் பற்றி, இந்த மண்ணில் வாழுகின்ற எல்லோருக்கும் நன்றாக தெரியும். கடந்த 1ஆம் தேதி வெளியான பிரபல தமிழ் நாளிதழில் கூட, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த பேட்டியை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள் அதையெல்லாம் பார்க்கும்போது. எனக்கே பெருமையாக இருக்கிறது. 

Advertisment

தமிழ்நாடு எப்படி யெல்லாம் உருவாக்கியிருக்கிறது தங்களுக்கு வாய்ப்புகளை தங்களுடைய வாழ்க்கைத்தரத்தை எப்படியெல்லாம் உயர்த்தியிருக்கிறது என்று மிகத் தெளிவாக பீகார் மக்கள் தமிழ்நாட்டில் வந்து பணிபுரியக்கூடிய, தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய, வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அந்த பீகார் மக்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால்,  பிரதமர் மோடி பீகாரில், வாக்கு அரசியலுக்காக அங்கு சென்று நாடகத்தை நடத்தியிருக்கிறார். நான் கேட்கிறேன்.  பிரதமர் மோடி பீகாரில் பேசிய அதே கருத்தை. இங்கே தமிழ்நாட்டில் வந்து பேச முடியுமா? பேசுவாரா? பேசக்கூடிய தைரியம் இருக்கிறதா? என்ற கேள்வியை தான் நான் கேட்க விரும்புகிறேன்.

dpi-mp-mani-son-marriage

யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை பரப்பினாலும், எவ்வளவு போலிச் செய்திகளை எல்லாம் அவர்கள் உருவாக்கினாலும், நான் தெளிவோடு சொல்கிறேன் இங்கே தொல் திருமாவளவன் குறிப்பிட்டது போல. 2026இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி நிச்சயம் அமையும் அமையும் என்று நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அன்றைக்கு அனைத்து சேனலிலும் "திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தது" என்ற செய்திதான் வரப்போகிறது! அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” எனப் பேசினார். இந்நிகழ்வில்  அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர். இராஜேந்திரன், சா.சி. சிவசங்கர், நாடளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதிஷ் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

Advertisment