கியூபா ஒருமைப்பாட்டு தேசிய குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ''என்னில் பாதியான செங்கொடி தோழர்கள் அழைத்து நான் வராமல் இருந்ததில்லை. இங்கு யாரும் யாருக்கும் அடிமை இல்லை. பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகள் மீது பாசம் வந்துவிட்டது. அடிமைத்தனம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசலாமா? நமக்குள் இருப்பது தேர்தலுக்கான கூட்டணி அல்ல கொள்கை நட்பு. எடப்பாடி பழனிசாமி நாள்தோறும் செய்தித்தாள் படிக்கிறாரா என்ற டவுட் இருக்கிறது எல்லோருக்கும். இருந்தாலும் தீக்கதிர் படிக்கும் பழக்கம் நிச்சயமாக உங்களுக்கு (எடப்பாடி பழனிசாமி) இருக்காது. இருந்திருந்தால் இப்படி பேசமாட்டீர்கள். நான் நாள்தோறும் தீக்கதிர் படிக்கிறேன். கம்யூனிஸ்ட் தோழர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் எப்படிப் பேசுகிறார்கள் என்பதையும் கவனிக்கிறேன். தோழமை சுட்டுதலுக்கும் அவதூறுகளுக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியும்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் சுட்டிக்காட்டுவதில் உடன்பாடானது எது என்பதை எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பேன். கம்யூனிஸ்டுகள் சுட்டிக் காட்டுவதை நான் புறக்கணிப்பதில்லை. ஏன் எங்களில் பாதி கம்யூனிஸ்ட்டுகள் தான். என்னுடைய பெயரே ஸ்டாலின்'' என்றார்.