தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள கொன்றைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் மகன் சபரிக்குமார் (20). இவர் திருச்சிற்றம்பலம் பகுதியில் ஒரு கேபிள் நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். வாரத்தில் ஒரு நாள் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் தற்போது தனது நண்பர் திருமணத்திற்காக நேற்று (28.08.2025) ஊருக்குச் சென்றவர் வீட்டிற்குச் செல்லவில்லை. ஆனால் இன்று (29.08.2025 - வெள்ளிக்கிழமை) இரவு அவரது பெற்றோருக்கு போன் செய்து என்னைக் கத்தியால் குத்திவிட்டனர். நான் காலகம் ரயில்வே கிராஸ் அருகே உள்ள ஆலமரத்தடியில் கிடக்கிறேன் என்று தகவல் கூறியுள்ளார்.
இந்த தகவலையடுத்து பெற்றோர்களும் உறவினர்களும் சென்று பார்த்த போது சபரிக்குமார் கழுத்து, இடுப்பு, முதுகுப் பக்கம் எனப் பல கத்திக்குத்துகளுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் பேராவூரணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சபரிக்குமாரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து தேவையான இடங்களில் தையல் போட்டு உடனே புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது சபரிக்குமரால் பேசமுடியாத நிலையில் உள்ளதால் யார் கத்தியால் குத்தியது எதற்காகக் குத்தினார்கள் என்ற விபரம் தெரியவில்லை. சம்பவம் குறித்து பேராவூரணி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். சமீப காலமாக மது மற்றும் மாற்றுப் போதையால் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பது வேதனையாக உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.