பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அரசு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கக் கூடாது. மீறிப் பங்கேற்றால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, 'நோ வொர்க் நோ பே' என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படாது என எச்சரித்துள்ளார்.
கேரளாவில் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் 100 சதவீதம் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 32 பணிமனைகளில் இருந்து வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், 650-க்கு மேற்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இல்லை. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணியில் உள்ளனர். பேருந்துகள் சீராக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் சீராக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் போலீசார் பாதுகாப்புடம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.