கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 42 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து ஒன்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த வகையில் இந்த பேருந்து இன்று (24.10.2025) அதிகாலை ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.  அச்சமயத்தில் பேருந்து வேகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில் தீயும்  பேருந்து முழுவதும் வேகமாக திடீரென்று பரவியது. இதனால் பேருந்து முழுவதுமாக பற்றி எரியத் துவங்கியது. அதே சமயம் அதிகாலை  நேரம் என்பதால் அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். 

Advertisment

மற்றொரு புறம் பேருந்தில் இருந்த ஓட்டுநர், நடத்துநர் ஆகிய இருவரும் விழித்துக் கொண்டிருந்த நிலையில் தீ பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகளை எழுப்பி வெளியேற முயன்றனர். இருப்பினும் பேருந்து முழுவதுமாக பற்றி எறிந்து பயணிகளுக்கு மூச்சு திணல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பேருந்தில் இருந்த 42 பயணிகளில் 15 பயணிகள் மட்டும் பேருந்தின் அவசரக் கால வழியைப் பயன்படுத்தி வெளியே குதித்து உயிர் தப்பியுள்ளனர். மற்ற பயணிகள் பேருந்தில் சிக்கிக் கொண்ட நிலையில் சுமார் 12 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகத் தெரிய வந்துள்ளது. 

Advertisment

இதற்கிடையே இந்த தீ விபத்து  குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேர்ந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் பேருந்தில் எரிந்து கொண்டிருந்த தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். மேலும் பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ வித்தில் சிக்கி 12க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதோடு மீட்புப் பணியை மேலும் தீவிரப்படுத்துமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.