தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் பெங்களூருவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 23 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து கிளம்பிய இந்தப் பேருந்து, ஆந்திர மாநிலம் கர்னூல் 44 வது தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அதிகாலை 3:30 மணியளவில் விபத்துக்குள்ளானது. பேருந்து தனது முன்னே சென்ற இருச்சக்கர வாகனத்தின் மீது மோதியதில் அதனை ஓட்டி வந்த நபர் தூக்கி வீசப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். அதே சமயம் அந்த இருச்சக்கர வாகனம் பேருந்தின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டது.

Advertisment

இதனைக் கவனிக்காத பேருந்து ஓட்டுநர், தொடர்ந்து பேருந்தை இயக்கி வந்துள்ளார். பேருந்தின் நடுவில் இருச்சக்கர வாகனம் சிக்கிக் கொண்டதில் தீப்பொறி ஏற்பட்டிருக்கிறது. பின்னர், அது பேருந்தின் டீசல் டேங்கிலும் பற்றி மளமளவென பேருந்து முழுவதும் பரவியிருக்கிறது. பேருந்தில் இருந்த ஓட்டுநர், நடத்துநர் ஆகிய இருவரும் விழித்துக் கொண்டிருந்த நிலையில் தீ பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகளை எழுப்பி வெளியேற முயன்றனர்.

Advertisment

அதிகாலையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகளில் லோவர் பெர்த்தில் இருந்த பயணிகள் மட்டும் உடனடியாகப் பேருந்திலிருந்து வெளியேறி உயிர் பிழைத்தனர். சிலர் அவசரகாலக் கதவுகளின் மூலமும் வெளியேறினர். ஆனால் அப்பர் பெர்த்தில் பயணித்த நபர்கள் கீழே இறங்குவதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதனால் 25  பயணிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையே இந்தத் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு குடும்பத்திடம் ஒப்படைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதே சமயம், சிலரது உடல்கள் முற்றிலுமாக எரிந்து வெறும் எலும்புக்கூடாக இருப்பதால் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் டி.என்.ஏ. பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

இது குறித்துப் பேசிய கர்னூல் காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் பாட்டீல், “ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற காவேரி டிராவல்ஸின் வால்வோ பேருந்து, ஒரு இருச்சக்கர வாகனத்தில் மோதியிருக்கிறது. பின்னர் பேருந்தின் அடியில் இருசக்கர வாகனம் சிக்கிக் கொண்டதால், அதிலிருந்து தீப்பொறி ஏற்பட்டு விபத்து நடந்திருக்கலாம். தடயவியல் குழுவினர் விபத்திற்கான சரியான காரணங்களைக் கண்டறிந்து வருகின்றனர். மேலும், அது ஏசி பேருந்து என்பதால் பயணிகள் ஜன்னலின் கண்ணாடிகளை உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் கண்ணாடிகளை உடைக்க முடிந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேறியிருக்கின்றனர். 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இந்தத் துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னா தேகூர் கிராமத்திற்கு அருகே நடந்த பேரழிவு தரும் பேருந்து தீ விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அனைத்து ஆதரவையும் வழங்கும்” என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.