கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார். அதனை எதிர்த்து தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பேரில் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியான பிரவீன்குமார் ஐ.பி.எஸ். தலைமையிலான குழுவினர் கரூருக்கு இன்று (17.10.2025) வந்தனர். இந்த குழுவில் ஏ.எஸ்.பி. முகேஷ் குமார் மற்றும் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூவர் இடம்பெற்றுள்ளனர். சிறப்பு விசாரணை குழுவினர் (எஸ்.ஐ.டி.) இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுவதற்கு முன்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள இடத்தில் தங்கி விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த இடத்தை காலி செய்து நீர்வளத் துறைக்குச் சொந்தமான திட்ட இல்லத்தில் வைத்து சிறப்புக் குழு விசாரணை மேற்கொண்டு வந்தது.
கரூர் சம்பவத்தில் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்கள், சவுண்ட் சர்வீஸ் நடத்தியவர்கள் உள்ளிட்டவர்களை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால் தங்களிடம் இருந்த ஆவணங்களை இன்று சிபிஐயிடம் அக்குழு ஒப்படைத்த நிலையில் அந்த அலுவலகத்தை காலி செய்து புறப்பட்டு சென்றனர். இருப்பினும் அந்த பகுதியில் ஆவணங்கள் போன்ற சில காகிதங்கள் கிழிக்கப்பட்டு குவியலாக போட்டு எரிக்கப்பட்டுக் கிடந்ததால் இந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.