நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (28.01.2026) தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர், வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த கூட்டத்தொடரைக் கூட்டுவதற்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. இதில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மத்திய அரசின் கொள்கைகள் குறித்து விவரிப்பார் எனக் கூறப்படுகிறது. இதற்காக நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக்கூட்டம் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். அதன் தொடர்ச்சியாக குடியரசுத் தலைவரின் உரை, மத்திய பட்ஜெட் அறிவிப்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் எனப் பிப்ரவரி 13ஆம் தேதி வரை கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி மீண்டும் கூட உள்ளது. அதன்படி ஏப்ரல் 2ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களுடனான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கான முன்னோடி ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த 10ஆம் தேதி (10.01.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டி. உதயச்சந்திரன், இணைச் செயலாளர் (பட்ஜெட்) பிரத்திக் தாயள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026 - 2027ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி (01.02.2026) தாக்கல் செய்ய உள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/28/murmu-speecch-republic-day-urai-1-2026-01-28-07-24-11.jpg)
அதன் பிறகு குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடத்தப்பட உள்ளது. முன்னதாக பட்ஜெட் தயாரிப்பு பணியின் முக்கிய அங்கமாக விளங்கும் அல்வா கிண்டும் நிகழ்வு மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நார்த் பிளாக் அலுவலகத்தில் நடைபெற்றது. இருப்பினும் இந்நிகழ்வின் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு பட்ஜெட் ஆலோசனைகள் புதிய அலுவலகமான கர்த்தவிய பவனில் நடைபெற்றாலும், அங்கு போதிய அச்சக வசதிகள் இல்லாத கரணத்தால் பழைய அலுவலகத்திலேயே அச்சிடும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பட்ஜெட் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ரகசியம் காப்பதற்காக பட்ஜெட் தாக்கல் வரை வெளியுலக தொடர்பின்றி அங்கேயே தங்கியிருப்பது வழக்கமான ஒன்றாகும்.
முன்னதாக டெல்லியில் நேற்று (27.01.2026) அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நாட்டின் வெளியுறவு கொள்கை, மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாப்பு திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள விபி ஜிராம்ஜி திட்டம். எஸ்.ஐ.ஆர். உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் எஸ்.ஐ.ஆர்., விபி ஜிராம்ஜி திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டதால் மீண்டும் விவாதிக்க முடியாது என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
Follow Us