கடலூர் மாவட்டம், புவனகிரி சேர்ந்த ஒரு சிறுமி அருகிலுள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெரியப்பா மகன், மேல்வனகிரி கோட்டைமேட்டு தெருவைச் சேர்ந்த 25 வயதான அஜய். தங்கை முறையில் உள்ள, 12 ஆம் வகுப்பு மாணவியிடம், அஜய் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.இதனிடையே, மாணவி 8-ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே, அஜய் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பின்னர், மாணவி பூப்பெய்திய பிறகு, அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால், மாணவி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், அஜய், மாணவியை மிரட்டி அடிக்கடி வன்கொடுமை செய்ததை, தனது நண்பர்களான சூர்யபிரகாஷ் (21), அரவிந்தன் (22), சக்தி (21) ஆகியோரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, அவர்கள் மூவரும் மாணவியிடம் சென்று, “நீ அஜய்யுடன் தனிமையில் இருந்த வீடியோ எங்களிடம் உள்ளது. அதை வெளியே விட்டால், உன்னுடைய அப்பா, அம்மா தூக்கில் தொங்கிவிடுவார்கள். நாங்கள் அதை வெளியே விடாமல் இருக்க வேண்டுமென்றால், நீ எங்களுடனும் தனிமையில் இருக்க வேண்டும்” என்று மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மாணவியை, அஜய்யின் நண்பர்கள் மூவரும் மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மாணவியின் நடவடிக்கையில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் கேட்டபோது, மாணவி தெளிவாகப் பதிலளிக்க மறுத்துள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அவரை சென்னையில் உள்ள சித்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சித்தி அன்பாகப் பேசியபோது, தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து மாணவி விவரித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் சித்தி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை விசாரித்த வடபழனி அனைத்து மகளிர் போலீசார், வழக்கை சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். அதன்படி, காவல் ஆய்வாளர் லட்சுமி மேற்கொண்ட விசாரணையில், சிறுமிக்கு நடந்த கொடூரங்கள் உண்மை எனத் தெரியவந்துள்ளது. பின்னர், போக்ஸோ சட்டத்தின் கீழ் அஜய், சூர்யபிரகாஷ், சக்தி ஆகிய மூவரைக் கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அரவிந்தனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சக்தி என்ற இளைஞர் மட்டும் கோவையில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், மற்ற மூவரும் “நாங்கள் தான் கெத்து” என்று வெட்டியாக ஊரைச் சுற்றி வந்த இளைஞர்கள் எனவும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.