“காதலியை ஏன் கிண்டல் செஞ்ச...?”; தட்டிக்கேட்ட தம்பிக்கு நேர்ந்த கொடூரம் - அண்ணனின் வெறிச்செயல்!

103

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மூத்த மகன் தவசி, இளைய மகன் பாஸ்கர். இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், ஜூலை17 ஆம் தேதி அதிகாலை, பாஸ்கர் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், பாஸ்கரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குடும்பத்தாரிடம் விசாரணையை தொடங்கினர். முதலில் முன்னுக்குபின் முரணாக பதிலளித்த பாஸ்கரனின் அண்ணன் தவசி போலீசாரின் கிடுக்குபிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவலை கூறியிருக்கிறார். அதில், தவசியும் பாஸ்கரும் இணைந்து வீட்டின் முன்பு கசாப்பு கடை நடத்தி வந்தனர். ஆனால், தவசி கடையின் வருமானத்தை தேவையற்ற செலவுகளுக்கும், குடிப்பழக்கத்திற்கும் பயன்படுத்தி வந்ததால், பாஸ்கர் அவரை அடிக்கடி எச்சரித்து வந்ததுள்ளார்.

இந்த நிலையில் ஜூலை 16 ஆம் தேதி, அண்ணன் தவசி, தம்பி பாஸ்கரின் காதலியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் தந்தை மாரிமுத்துவிற்கு தெரியவர, உடனே பாஸ்கரை அழைத்து, “அண்ணன் தவசியை கண்டிக்க வேண்டும்; இல்லையென்றால் தேவையற்றை பிரச்சனை வரும்” என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, பாஸ்கர் தனது அண்ணன் தவசியிடம், “என் காதலியை ஏன் கிண்டல் செஞ்ச...?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியிருக்கிறது. சண்டையில் தவசி, பாஸ்கரை பார்த்து, “உன்னை போட்டு தள்ளிட்டா, எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும்...”  என்று கூறியிருக்கிறார்.

ஆனால், அதனை பாஸ்கரும், குடுபத்தினரும் சாதரணமாக எடுத்துகொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இரவில் அனைவரும்  வீட்டில் அசந்து தூங்கிகொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் அடங்காத ஆத்திரத்தில் இருந்த அண்ணன் தவசி, தூங்கிகொண்டிருந்த தம்பி பாஸ்கரை கழுத்து, நெஞ்சு உள்ளிட்ட 9 இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து அண்ணன் தவசியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

kallakurichi
இதையும் படியுங்கள்
Subscribe